பணியிடங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் : சீமான்

மத்திய அரசு நிறுவனங்களில் போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த வட மாநிலத்தவர்களை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின்மிகு நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் வடவர்களால் நிரப்பப்பட்டுப் பல்லாண்டு காலமாகவே தமிழர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், மிசோரம், சிக்கிம், மணிப்பூர், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தனிச்சட்டமே இயற்றியுள்ளன. அதுபோன்று தனியார்த் துறைகளில் 80 விழுக்காடு அளவுக்கு மண்ணின் மைந்தர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டமியற்றியுள்ளன.

தி.மு.க. அரசு தமிழர்களது பணிவாய்ப்புகள் வடவர்களிடம் பறிபோவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்று நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தனிச்சட்டம் நிறைவேற்றி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஒருகோடி தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

போலிச்சான்றிதழ் கொடுத்து ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்த 300 வடமாநிலத்தவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், நிகழ்ந்துள்ள இம்முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் தொடர்புடைய அனைவருக்கும் சட்டத்தின் மூலம் உரிய தண்டனைக் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.