துணைவேந்தர் நியமன சட்ட மசோதா: வைகோ பாராட்டு

தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள நேரத்தில், தி.மு.க. அரசு இத்தகைய சட்ட முன்வரைவைக் கொண்டு வந்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று வைகோ கூறி உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை, மாநில அரசே தேர்வு செய்ய வகை செய்யும் சட்ட முன்வரைவு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. கல்வித்துறையில் மாநில உரிமையை முற்றாகப் பறிக்கும் நோக்கத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள நேரத்தில், தி.மு.க. அரசு இத்தகைய சட்ட முன்வரைவைக் கொண்டு வந்து இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்ட முன்வரைவு மூலம், கல்வித்துறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி இருப்பது பாராட்டுக்கு உரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.