உக்ரைனுக்கு எதிரான போர் 3ம் உலக போருக்கான உண்மையான ஆபத்து என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் 2 மாதத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ரஷ்ய படைகள், ஒரே இரவில் 423 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 26 ராணுவ இலக்குகளை அழித்துள்ளது. இந்த தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முற்றிலும் அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் உடனே பேச்சுவார்தைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் அரசின் ராணுவ நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள லாவ்ரோவ், உக்ரைன் எல்லை மீறினால் அது பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கூறினார். நல்ல எண்ணத்திற்கும் வரம்புகள் உள்ளதாக கூறிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர், அது பரஸ்பரமாக இல்லாவிட்டால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் பலன் ஏதும் இருக்காது என்று கூறினார். அமைதி வழியில் செல்லவே ரஷ்யா விரும்புவதாக குறிப்பிட்டுள்ள லாவ்ரோவ், உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் உதவிகள் நீடித்தால் 3ம் உலக போரின் உண்மையான ஆபத்து தற்போதும் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷ்ய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது. அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள், ரஷ்ய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.