ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் 3வது மாதமாக நீடிக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷிய படைகள் தலைநகர் கிவ்வையும் குறிவைத்துள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:

என்னையும், எனது குடும்பத்தினரையும் பிடிக்க ரஷிய துருப்புகள் மிக அருகில் வந்தன. போர் தொடங்கிய அன்று நான், மனைவி ஜலேன, 17 வயது மகள் மற்றும் 9 வயது மகன் குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்டு எழுந்தோம். நான் ரஷியாவின் இலக்கு என்பதால் அதிபர் அலுவலகங்கள் பாதுகாப்பான இடம் அல்ல என்பது விரைவில் தெளிவாக தெரிந்தது. என்னையும், குடும்பத்தினரையும் கொல்ல அல்லது பிடிப்பதற்காக ரஷிய தாக்குதல் படை வீரர்கள் தலைநகர் கிவ்வுக்குள் பாரா சூட் மூலம் நுழைந்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எங்களை கைப்பற்ற மிக நெருங்கி வந்தனர். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.

இதற்கிடையே ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்ற போது தலைநகர் கிவ் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்தது.இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் வருகையின் போது தாக்குதல் நடத்தியதை ரஷியா உறுதிப்படுத்தி உள்ளது.

உக்ரைனில் ரஷிய படை தாக்குதலின் போது அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டது வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தும் என அமெரிக்கா நம்பவில்லை என்று, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கிவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டிப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சுமார் 5,00,000 உக்ரேனியர்கள் சட்டவிரோதமாக ரஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று போலந்து ஊடகத்திடம் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா.பொதுச் செயலாளர் உக்ரைன் வந்திருந்தபோது கீவ் நகரின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாக ரஷியா உறுதிபடுத்தி உள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் மூலம் உக்ரைன் விண்வெளி நிறுவனங்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷியா இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் புகைப்படத்தை டைம் இதழ் தனது அட்டை படத்தில் வெளியிட்டுள்ளது. அதில் போர் நடந்து வரும் சூழ்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனை எப்படி வழிநடத்துகிறார் என்ற வரிகளுடன் டைம் வார இதழ் வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரண்டு தன்னார்வலர்கள் ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரையும் கண்டுபிடித்து மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.