இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு!

நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்த ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததையடுத்து, மார்ச் 9-ந் தேதி 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் பின்னர் அறிவித்தது.

இந்த நிலையில் இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான போதிய நிதியை அரசு ஒதுக்காததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் இயக்குனர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கா தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதி வழங்குவதை அரசு உறுதி செய்த பின்னரே தேர்தலை நடத்துவதற்கான அடுத்த தேதி அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.