தமிழ்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை: ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

சென்னையில் ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. 111 பேரில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தொடர்ந்து 109 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பதற்றம் அடைய தேவையில்லை.

தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்கு தொற்று உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 1.48 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழல் தற்போது இல்லை. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை. தொற்று பரவல் விஷயத்தில் அச்சப்பட வேண்டிய நிலையில் இல்லை. அக்கரைப்பட வேண்டிய நேரத்தில் உள்ளோம். கொரோனா பரவல் இல்லாவிட்டாலும் மக்கள் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.