சென்னை போலீஸ் கஸ்டடி மரணம்; முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

சென்னை பட்டினம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தலைமை செயலக காலனி ஸ்டேஷன் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவு விக்னேஷ் மற்றும் அவரது நண்பரான திருவல்லிகேணியைச் சேர்ந்த சுரேஷ் (28) என்பவரும் ஆட்டோவில் புரசைவாக்கம் கெல்லீஸ் சாலையில் வந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை செயலக காலனி ஸ்டேஷன் எஸ்ஐ பெருமாள், காவலர் பொன்ராஜ் ஊர்காவல் படை காவலர் தீபக், அந்த ஆட்டோவை மடக்கி விசாரித்தனர். விசாரணையின்போது இருவரும் கஞ்சா போதையில் தெரிய வந்தது. தொடர்ந்து ஆட்டோவை சோதனையிட்டபோது, மதுபாட்டில்களும் கிடந்தன. உடனே அவர்களை போலீசார் காவல் நிலையம் கொண்டு செல்ல முற்பட்டபோது விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரை குத்த முயற்சித்துள்ளளார். பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இருவரது குற்ற பின்னணிகளை ஆராய்ந்ததில், விக்னேஷ் மீது இரண்டு வழக்குகளும், சுரேஷ் மீது 11 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

மறுநாள் காலை வரை ஸ்டேஷனில் இருந்த இவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விக்னேஷுக்கு வாந்தி, வலிப்பு ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொன்று செல்லப்பட்டதாகவும் அங்கு விக்னேஷ் ஏற்கனவே இறந்திருப்பது தெரிய வந்தது. விக்னேஷின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு அவரது குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் உடனடியாக வழங்கப்படும். மேலும், விக்னேஷின் நண்பரான சுரேஷுக்கு அரசு செலவில் உயர் சிகிச்சை அளிக்கப்படும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவல் மரணத்தில் தீவிர விசாரனை என்பதில் உறுதியாக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விக்னேஷ் இறப்பு குறித்து சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஸ்ஐ பெருமாள், காவலர் பொன்ராஜ் ஊர்காவல் படை காவலர் தீபக் ஆகிய மூவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.