கணிதத்தில் சிறந்தது யார்: யுனெஸ்கோ ஆய்வறிக்கை

படிப்பிலும் அறிவியலிலும் ஆண்களை விட பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் என யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பலருக்கும் கணித பாடம் இன்றும் கசக்கும் நிலையில் அதில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற கேள்வி நம்மில் பல பேருக்கு உண்டு. இதுதொடர்பாக யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் முழுவிபரம் வருமாறு:

உலகில் பல நாடுகளில் இன்னும் பெண்களுக்கு சரியான கல்வி கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ஆண், பெண்கள் இடையே கல்வி பயில்வது தொடர்பான பாகுபாடு தொடர்ந்து வருகிறது. கல்வி துறையில் நிலவும் பாலின சமத்துவமின்மை, பெண்களின் கல்வி கற்கும் திறன், அவர்களுக்கான தடைகள் குறித்து யுனெஸ்கோ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கை 120 நாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் உள்ள துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த அறிக்கை தற்போது சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக கணித பாடம் பலருக்கும் கசக்கும் நிலையில் பாலினம் அடிப்படையில் அந்த பாடம் இனிப்பது ஆண்களுக்கா, பெண்களுக்கா என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அறிக்கையின்படி முந்தைய காலத்தை ஒப்பிடும்போது பல நாடுகளில் ஆண்களை காட்டிலும் பெண்கள் கல்வி கற்பதில் ஆர்வமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தில் சில ஆண்டுகளாக பெண்களின் முன்னேற்றம் அதிகரித்து வருகிறது. இந்த பாலின வேறுபாடு ஏழை நாடுகளிலும் கூட படிப்படியாக மறைந்து வருகிறது. ஒரு சில நாடுகளில் இந்த பாலின வேறுபாடு அப்படியே எதிர்மறையாக மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலை கல்வியில் பெண்கள் கணிதத்தில் அதிகமாக தேர்ச்சி பெற்றாலும், அனைத்து நாடுகளிலும் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என பிரதிநிதித்துவப்படுத்தப் படுகின்றனர். நடுத்தரம் மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளில் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் பெண்களின் கணிதம், அறிவியல் சார்ந்த அறிவு கணிசமாக உயர்ந்துள்ளது. முந்தைய காலத்தில் கணிதத்தில் ஆண், பெண் இரு பாலரிடத்தில் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. தற்போது மாணவிகளை விட மாணவர்களே கணக்குப் போடுவதில் கில்லாடிகளாக இருந்தனர். இந்நிலை தற்போது மாற்றமடைந்துள்ளது.

பெண்களுக்கு அறிவியல் அறிவு இருந்தாலும் கூட அவர்கள் அதுசார்ந்த தொழிலில் ஈடுபடுவது இல்லை. மேலும் பெண்கள் பல நாடுகளில் தொழில்நுட்ப பாடம், பொறியியல் மற்றும் கணிதம் துறை சார்ந்த படிப்புகளை அதிகமாக படிக்கவில்லை. இது உயர் கல்வியை தொடர பாலினம் என்பது தடையாக இருக்கலாம் என்பதை காட்டும் வகையில் உள்ளது.

வாசிப்பிலும் பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர். துவக்க கல்வியில் சவுதி அரேபியாவில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இங்கு 4ம் வகுப்பு அடிப்படையில் 77 சதவீத பெண்களுக்கும், 51 சதவீத ஆண்கள் மட்டுமே நன்றாக வாசிக்கின்றனர். தாய்லாந்தில், மாணவர்களை விட மாணவிகள் 18 சதவீதமும் , மெரோக்கோவில் 10 சதவீதம் என்ற அளவில் சிறந்து விளங்குகின்றனர். இருப்பினும் கல்வியில் பாலின சமத்துவமின்மை விலக வேண்டும் என்றும், பெண்கள் தங்களது திறமையை முழுமையாக உணர்ந்து கொள்ள இன்னும் அதிகமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கைக்கான இயக்குனர் மனோஸ் அன்டோனினிஸ் கூறுகையில், ‛‛படிப்பிலும் அறிவியலிலும் ஆண்களை விட பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். கணிதத்தில் முன்னேறி வருகின்றனர். ஆனால் சில இடர்பாடுகளால் பெண்களுக்கான வாய்ப்புகள் மிக குறைவாக அமைகின்றன. கற்றலில் பாலின சமத்துவம் தேவை. மேலும் ஒவ்வொருவரும் தாங்கள் கற்றதை உலகில் பூர்த்தி செய்யும் உறுதியை கொண்டிருக்க வேண்டும்” என்றார்.