அணு ஆயுதப்போர் உருவாகும் சாத்தியம் உள்ளது: முன்னாள் ரஷ்ய அதிபர்!

உக்ரைன் போரில் ரஷ்யா முறியடிக்கப்பட்டால் அணு ஆயுதப் போர் உருவாக சாத்தியம் உள்ளதாக முன்னாள் ரஷ்ய அதிபர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து தான் ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

ரஷ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த டிசம்பர் 21ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைன் கண்டிப்பாக இணையும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்தநிலையில் அணு ஆயுத போர் உருவாக வாய்ப்புள்ளதாக ரஷ்ய முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை குறிப்பிடும் வகையில், “வழக்கமான போரில் அணுசக்தியின் தோல்வி அணு ஆயுதப் போரைத் தூண்டலாம்” என்று ரஷ்ய முன்னாள் அதிபர் மெட்வடேவ் கூறினார். மேலும் உக்ரைன் நேட்டோவில் இணையும் என்று கூறிவருகிறது. அப்படி இணைந்தால், ஒரு வேளை ரஷ்யா தோற்கடிக்கப்பட்டால், அணு ஆயுதப் போர் உருவாக சாத்தியம் உள்ளது. அதற்கு பின் இந்த உலகத்தின் தலைவிதி எவ்வாறு இருக்கும் என்பது கணிக்க முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.