சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்துள்ளது, மனித குலத்துக்கு எதிரான குற்றம் என, ஐ.நா.,வின் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம் பழங்குடியின மக்கள், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, ஐ.நா.,வின் மனித உரிமை அலுவலகம், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த அமைப்பின் தலைவரான, சிலியின் முன்னாள் அதிபர் மிச்சைல் பெச்லெட் தலைமையிலான இந்த அமைப்பு, தீவிர கள ஆய்வு செய்தது. சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என, பல்வேறு தரப்பினரின் கருத்துகள், தகவல்கள் திரட்டப்பட்டன. கடந்த மே மாதத்தில், மிச்சைல் பெச்லெட் நேரடியாக ஜின்ஜியாங் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தன. அதே நேரத்தில், அறிக்கையை வெளியிடக் கூடாது என சீனா வலியுறுத்தி வந்தது. தன் நான்கு ஆண்டு பதவிக்காலம், ஆக., 31ல் முடிவதற்குள், இந்த அறிக்கையை தாக்கல் செய்வதாக மிச்சைல் பெச்லெட் கூறியிருந்தார். பதவிக் காலம் முடிய, 11 நிமிடங்களே இருந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சீனாவில், உய்கர் உள்ளிட்ட முஸ்லிம் பழங்குடியினர் சித்ரவதை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றத்தில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங்க் வென்பின், ‘சீனாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சார்பில், இந்த அறிக்கை எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதில் எந்த உண்மையும் இல்லை,’ என்றார்.