பா.ஜ.,வில் உள்ள குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய, தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு, தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபுவுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகரில் சமீபத்தில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய சைதை சாதிக், பா.ஜ.,வில் இருக்கும் நடிகையர் குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு, இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்தவே, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி மன்னிப்பு கேட்டார். சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய மகளிர் ஆணையத்திற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபுவுக்கு, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பா.ஜ.,வில் உள்ள பெண் தலைவர்களான குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில், தரக்குறைவான வார்த்தைகளில், தி.மு.க., பேச்சாளர் சாதிக் பேசியதை, வீடியோ ஆதாரத்துடன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ., மகளிரணியும் புகார் அளித்துள்ளது.
இதுபோன்ற பேச்சுக்கு, சமீபத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சாதிக்கின் பேச்சு, இந்திய தண்டனை சட்டம் – 509ன்படி குற்றமாகும். சொல், செயல், சைகை என எந்த வகையிலும், பெண்களின் நடத்தையை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவது, மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாகும். எனவே, சாதிக் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரிக்க வேண்டும். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஏழு நாட்களுக்குள், தேசிய மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.