இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஓராண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 220-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் தொடர்வதும், அதை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.
எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அட்டூழியம் தொடருமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசை இந்திய வெளியுறவுத் துறை கண்டிக்க வேண்டும். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.