ஜெயலலிதா குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. இந்த தேசம் முழுமைக்குமான எதை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும். இது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறாக நிறைய தவறான, மோசமாக கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். இவற்றை உடைக்க வேண்டும். உண்மை மேலோங்க வேண்டும். தமிழ்நாடு என்பது பாரதத்தின் ஆன்மா. பாரதத்தின் அடையாளம். சொல்லப்போனால் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக அண்ணா வழியில் வந்த கட்சி. பெயரிலேயே அண்ணாவை கொண்டுள்ளோம். 1963ல் நேரு பிரதமராக இருந்த போது, சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய கோரினோர். அதற்கு பெயர்மாற்றம் மூலம் கிடைக்கப் போகிறது என்று நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு அண்ணா, கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலமாகவும், நாடாளுமன்றம் என்பதை லோக் சபா என்று மாற்றிதன் மூலம் என்ன கிடைத்ததோ, அதே அனுகூலம் தான் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்று பதிலளித்தார். தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பெயராகும். இதன்மூலம் நமது மாநிலத்திற்கு தனித்தன்மை இருக்கிறது. தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக அரசு செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, திமுக அரசு ஆட்சியமைத்ததில் இருந்து எந்தவொரு பணியும் ஆக்கப்பூர்வமாக நடக்கவில்லை. தேர்தலின் போது கொடுக்க வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. கிட்டத்தட்ட 3.5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அதனை நிரப்பாமல் இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றிய செவிலியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்க வேண்டும். தூங்குபவர்களை எழுப்பிவிடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களையோ, மீனவர்களையோ, விவசாயிகளையோ அழைத்து பேசாமல் இருக்கிறது. இந்த அரசைப் பொறுத்தவரை ஒரு விழா அரசு. இந்த அரசின் விழா நாயகன் மு.க.ஸ்டாலின். எதற்கெடுத்தாலும் விழா, உட்கார்ந்தால் விழா, நடந்தால் விழா என்று போய் கொண்டிருக்கிறது. இதனால் விரைவில் திமுக அரசு வீழும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஜெயலலிதா பற்றி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியது குறித்த கேள்விக்கு, மறைந்த தலைவர்களை கொச்சப்படுத்த கூடாது. அதுவொரு பண்பாடற்ற செயல். ஜெயலலிதா உயிரோடு இல்லாத போது பண்பாடின்றி பேசி இருக்கிறார். கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் குடும்பத்துடன் சென்று காலில் விழுந்தவர். அவருக்கு அடையாளம் கொடுத்த இயக்கம் அதிமுக தான். அவரின் செயல் கோழைத்தனமான, மிருகத்தனமான செயல் என்று விமர்சித்தார்.