மூன்றாம் உலகப்போர் இருக்காது என்றும் ரஷிய ஆக்கிரமிப்பை உக்ரைன் நிறுத்தும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டை நெருங்கி வருகிறது. உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் ஜெலென்ஸ்கி சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) கோல்டன் குளோப் விருது விழாவில் காணொலி மூலமாக பங்கேற்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மூன்றாம் உலகப்போர் இருக்காது என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
முதல் உலகப் போர் லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்றது. இரண்டாம் உலகப் போர் கோடிக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது. இந்நிலையில் மூன்றாம் உலகப்போர் நிகழ வாய்ப்பில்லை. ஏனெனில், இது முத்தரப்பு இல்லை. ரஷ்ய ஆக்கிரமிப்பை உக்ரைன் நிறுத்தும். தற்போது 2023 ஆம் ஆண்டு. உக்ரைனில் போர் இன்னும் முடிவடையவில்லை. ஆனால், அலை மாறுகிறது. யார் வெல்வார்கள் என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. உக்ரைனில் இன்றும் போர் நடக்கிறது, கண்ணீர் இருந்து வருகிறது. உக்ரைன் சுதந்திரத்திற்காக உதவி வரும் அனைவருக்கும் நன்றி. சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் வாழ்வுரிமைக்காகவும் அன்புக்காகவும் போராடி வருகிறோம். சுதந்திர உலகின் உதவியுடன் உக்ரைன் வெற்றி பெறும். வெற்றியில் நீங்கள் அனைவரும் எங்களுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.