மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார மந்த நிலையை கவனிக்கத் தொடங்கியது, இதனால் டெஸ்லா, ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள், நெட்பிளிக்ஸ், அமேசான் என அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் ஊழியர்களைக் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படிப்படியாகப் பணிநீக்கம் செய்து வருகிறது
கடந்த 2022-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களின் வரவு-செலவு தொடர்பான விவரங்களை இன்னும் சில நாள்களில் வெளியிட உள்ள சூழலில், மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமானது அதன் பணியாளர்களில் 5 சதவீதத்தை அல்லது சுமார் 11,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று புதன்கிழமை ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன.
உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், தொடர்ந்து இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என கூறுகிறது.