பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர். அவர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று அண்ணாமலை கூறினார்.
பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவும் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா சார்பில் கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கட்சியினர் தொடங்கி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது. வட மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், தென் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் பிரதமர் மோடி போட்டியிட முடிவு செய்துள்ளார் என்றும், தென் மாநிலத்தில் அவர் தமிழ்நாட்டில் தான் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் எனவும் தகவல் வெளியானது.
இது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர். அவர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். நாட்டு மக்கள் அனைவரும் அவர் மீது அன்பும், பாசமும் வைத்துள்ளனர். அது மட்டுமின்றி அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது அவர் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாகவும் வதந்தி பரவியுள்ளது. இது உண்மைதானா? என என்னிடம் பலரும் கேட்கிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் தூத்துக்குடிக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு கடையில் டீ குடிக்க சென்றேன். என்னை பார்த்ததும் அங்கிருந்தவர்கள், என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறாரா? என்பது தான். இதனை தெரிந்து கொள்ள அந்த அளவுக்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். பாரதிய ஜனதாவை தமிழகத்தில் வலுவான கட்சியாக மாற்ற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் அன்பு காட்டுகிறார்கள். அவரது செயல்பாடுகளை விரும்புகிறார்கள். தமிழகத்திலும் பிரதமர் மோடி அலை வீசுகிறது. தமிழகத்திலும் பாரதிய ஜனதாவுக்கு தனி அடையாளம் இருக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதனை நாங்கள் நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.