கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின் போது சட்ட சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து இருந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 2½ மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போதே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆளும் பாஜகவோ ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் விடாப்படியாய் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அடிக்கடி கர்நாடா வருகை தருகின்றனர். மறுபக்கம் பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் கர்நாடகம் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.
இத்தகைய அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று கர்நாடக சட்ட சபையில் அம்மாநில முதல்வர் பசாராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் பல்வேறு கவரச்சிகர அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்திருந்த எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் காதில் பூ வைத்துக் கொண்டு வந்தனர். சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்கும் போது காதில் இருந்த பூவை எடுக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் போது தேர்தல் வாக்குறுதியில் அளித்த எந்த திட்டங்களையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதேபோல், கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களை பாஜக அரசு ஏமாற்றிவிட்டதை சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூ வைத்துக்கொண்டு அவை நடவடிக்கையில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான சித்தராமையா, தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் 600 வாக்குறுதிகளை அளித்த பாஜக அதில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியிருப்பதாகவும் சித்தராமையா பல்வேறு தருணங்களில் பாஜக அரசை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் தான் கர்நாடக மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்தும் அடையாளமாக காதில் பூ வைத்துக் கொண்டு வந்து இருக்கின்றனர்.