கடலூர் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் அரசு அதிகாரியான சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல் நேர்காணல்களில் அரசியல், சட்டம் ஒழுங்கு சார்ந்த பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். வெளிப்படையாக இவர் தெரிவித்து வரும் கருத்துக்களால் இவரது பேச்சுக்களுக்கு மக்கள் வரவேற்பும் கிடைத்தது. பாரதிய ஜனதா கட்சி, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை இவர் தெரிவித்து வந்தார். சமீப காலமாக திமுக மீதும் தமிழ்நாடு அரசு மீதும் இவர் தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடலூர் சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக புத்தகங்களை வழங்க அனுமதி கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 76 புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்து அதனை பெற்றுக்கொள்ளுமாறு சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அரசியல் காரணங்களால் தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள சிறைத்துறை மறுத்து விட்டதாகவும் மனுவில் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இந்த புத்தகங்களை நீங்கள் படித்திருக்கீர்களா? கைதிகளின் வாழ்க்கைக்கு இந்த புத்தகங்கள் உதவும் என எவ்வாறு கூறுகிறீர்கள்” என கேள்வி எழுப்பினார். விளம்பர நோக்கத்திற்காக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் முன் புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக்கூறி சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.