அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் குழந்தை, பேராயர் உட்பட 17 பேர் பலி!

அமெரிக்காவில் வெவ்வேறு அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு பச்சிளம் குழந்தை, பேராயர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பது சமீபகாலமாக சர்வசாதாரணமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் டெக்சாஸில் உள்ள பள்ளியில் சைக்கோ நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கிப் போட்டது. 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் துப்பாக்கியை வாங்கலாம் என்ற அந்நாட்டு சட்டமே இந்த சம்பவங்களுக்கு மூலக்காரணமாக இருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 44 ஆயிரம் பேர் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவை உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான வாஷிங்டனின் பிறந்த நாள் அங்கு ஜனாதிபதிகள் தினம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மூன்றாம் திங்கள்கிழமை இது கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அமெரிக்கா முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படும். வார இறுதி நாட்களுடன் சேர்ந்தவாறு இந்த விடுமுறை வருவதால், அமெரிக்க மக்கள் சுற்றுலா, பார்ட்டி என பொழுதை கழிப்பது வழக்கம்.

இந்நிலையில், சிகாகோ நகர் நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கார் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல, நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் திருவிழா அணிவகுப்பின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்ததாக, மிசிசிப்பி மாகாணத்தில் இரவுநேர பார்ட்டியின் போது சூப்பர் மார்க்கெட் உட்பட 4 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நியூஜெர்சி மாகாணத்தில் ஒருவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். அடுத்ததாக, டென்னிசி மாகாணத்தில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீஸ் அதிகாரியை 18 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்தான். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மர்மநபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிசூட்டில் கத்தோலிக்க பேராயர் டேவிட் ஓ கெனோலின் உயிரிழந்தார். இவ்வாறு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இரண்டே நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்கும்படி அமெரிக்க மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அவர்களின் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளன.