நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும், நெசவும் பாதுகாக்கப்படும்: சீமான்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும் பாதுகாக்கப்படும், நெசவும் பாதுகாக்கப்படும். விவசாயிகளே விவசாயிகளை தோற்கடித்தால் எங்களை யார் ஜெயிக்க வைப்பார்கள் என்று ஈரோட்டில் சீமான் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் இருந்து சம்பத்நகர், பெரியவலசு நால்ரோடு, விளையாட்டு மாரியம்மன் கோவில் வீதி, வாய்க்கால் மேடு, மாணிக்கம்பாளையம், நாராயணவலசு, திருமால்நகர், டவர் லைன் காலனி, குமலன்குட்டை வரை திறந்த ஜீப்பில் நின்றபடி பிரசாரம் செய்து கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அதைத்தொடர்ந்து குமலன்குட்டை பகுதியில நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது கூறியதாவது:-

நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை. இன உணர்வும், தன்மான உணர்வும் கொடுக்கிறோம். அதனால் எங்களுக்கு கூட்டம் கூடுகிறது. வேளாண்மையும், நெசவும் தொழில் அல்ல. அது வாழ்வியல் பண்பாடு, வாழ்க்கை முறை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும் பாதுகாக்கப்படும், நெசவும் பாதுகாக்கப்படும். மின் கட்டணம் மற்றும் நூல் விலையை உயர்த்தி விசைத்தறி கூடங்களை மூடக்கூடிய ஆள் நான் கிடையாது. நான் குறைகேட்க வந்தவன் அல்ல. அந்த குறையை தீர்க்க வந்தவன்.

பா.ஜ.க. ஆட்சியில் இருக்க மக்கள் காரணம் அல்ல. காங்கிரஸ் கட்சியும், அதன் கூட இருந்த தி.மு.க.வும் தான். சகிக்க முடியாத ஊழல், லஞ்சத்தால் மக்கள் வெறுத்துவிட்டனர். 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். அதன் பின்னர் மக்கள் அவர்களை தூக்கி எறிந்தனர். அதை மோடி பிடித்துக்கொண்டார். தன்னாட்சி அதிகாரம் என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கும், வருமான வரித்துறை, புலன் விசாரணை அமைப்பு, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை மோடியின் 5 விரல்கள் ஆயிற்று. அவர் மடக்கினால் மடங்கும், நீட்டினால் நீளும்.

நம்மிடம் ஒரு பெட்டிதான் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் 2 பெட்டி இருக்கிறது. ஒன்று ஓட்டுப்பெட்டி, மற்றொன்று பணப்பெட்டி. அமெரிக்காவில் வாக்கை கையில் போடுகிறார்கள். மனித கழிவை எந்திரம் மூலம் அள்ளுகிறார்கள். ஆனால் இங்கு வாக்கை எந்திரத்தில் போடுகிறார்கள். மனித கழிவை கையில் அள்ளுகிறார்கள். சிங்கப்பூரில் ஊழல், லஞ்சம் இல்லாத நிர்வாகம் இருக்கிறது. ஆனால் இங்கு ஊழல், லஞ்சம் மட்டுமே நிர்வாகமாக இருக்கிறது. விவசாயி சின்னத்துக்கு விவசாயிகளே வாக்களிக்கில்லை என்றால் வெளிநாட்டுகாரர்களா வாக்கு செலுத்துவார்கள். விவசாயிகளும், நெசவாளர்களும் உங்கள் பிள்ளைகளை கைவிட்டால் எங்களுக்கு வேறு யார் வாக்கு செலுத்துவார்கள். விவசாயிகளே விவசாயிகளை தோற்கடித்தால் எங்களை யார் ஜெயிக்க வைப்பார்கள். ஆள வைப்பார்கள்.

அ.தி.மு.க. வென்றால் ஒரு எண்ணிக்கை. தி.மு.க. வென்றால் ஒரு எண்ணிக்கை. ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வென்றால் வரலாற்றில் மாபெரும் புரட்சி. பொன் எழுத்துக்களால் எழுதப்படவேண்டியது. ஈரோடு கிழக்கில் வாழ்ந்த மக்கள் புரட்சியாக தேர்தலை மாற்றி எழுதினார்கள் என்று வரும். நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் தமிழனின் இனம், மானம், தன் மானம் காக்கும். உங்கள் எதிர்கால பிள்ளைகளின் நல்வாழ்வை பாதுகாக்கும் என்பதை கவனத்தில் வைத்து வாக்களியுங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.