அணு ஆயுத கையிருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினின் முடிவு, மிகப் பெரிய தவறு என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா்.
ஒவ்வொரு நாடும் தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளன. தன்னுடைய பாதுகாப்பிற்கு எனப் பல்வேறு ஆயுதங்களைத் தயாரித்து மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளன. எந்த ஒரு நாடும் தற்காப்பிற்கு ஆயுதங்களை நாடுவது, அந்த நாடுகளின் தார்மீக கடமை என்றே கருதப்படுகின்றது. எனினும், ஒரு நாடு தன்னுடைய ராணுவ மேலாண்மையை நிலை நிறுத்த அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும் பொழுது, அது உலகிற்கே பேரழிவாக மாறி விடுகின்றது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் இத்தகைய நிகழ்விற்குச் சாட்சியாக நிற்கின்றன. அதிலும் அணு ஆயுதங்களைக் கணக்கின்றி வைத்திருக்கும் நாடுகளுக்கு இடையே ஏற்படும் சண்டை மற்றும் சச்சரவுகள், இந்த உலகின் இறுதி நாட்களுக்கு வழி வகுக்குமோ? என்கின்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
தற்பொழுது ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் நடைபெறும் யுத்தம் பல பல பரிமாணங்களைக் காட்டி வருகின்றது. யுத்தம் நடப்பது என்னவோ ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையே. ஆனால், உக்ரைனின் பின்னால் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் உள்ளன. எனவே இந்த யுத்தம் ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நடைபெறுகின்றது என்றே எடுத்துக் கொள்ளலாம். ஒரு சாதாரண மனிதனின் கண்ணிற்கு வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மை ரஷ்யாவை ஆட்டிப் படைக்கும், அந்த நாட்டின் அதிபரான புடினுக்குத் தெரியாமலா இருக்கும். இந்த நிலையில் விளாடிமிர் புடின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இறங்கி விட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக விலகி விட்டார். இந்தச் செயல், இவ்விரு நாடுகள் கடந்து உலகம் முழுவதும் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றது. இதன் தாக்கம் எத்தகையது என்பதைச் சற்று விரிவாகப் பார்த்தால் உங்களுக்கே இந்த நிலைமையின் கலவரம் புரியும்.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடங்கிய முதல் ஆண்டு நிறைவுக்குச் சில நாட்களுக்கு முன்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாட்டு மக்களுக்குப் பிப்ரவரி 21 ஆற்றிய உரையில், அமெரிக்கா உடனான கடைசிப் பெரிய இராணுவ ஒப்பந்தமான ‘நியூ ஸ்டாா்ட்’ (New START) இல் பங்கேற்பதை ரஷ்யா நிறுத்திக் கொள்கிறது என்று அறிவித்தார். ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தத்தின் கீழ் ஒரு முக்கியத் தேவையாக ஒரு நாட்டின் ராணுவ வசதிகளை அமெரிக்கா ஆய்வு செய்யலாம். இதன் மூலம் இந்த ஒப்பந்தம் படி ரஷ்யாவின் இராணுவ வசதிகளை அமெரிக்கா ஆய்வு செய்ய விரும்புகிறது, அதே நேரத்தில் அதன் இலக்கு ரஷ்யாவின் மூலோபாயத் தோல்வி என்று வெளிப்படையாகக் கூறுவது “அபத்தமான நாடகம்” என்று புடின் கூறினார்.
“Strategic Arms Reduction Treaty” என்பதில் இருந்து உருவானது தான் START என்ற பெயர், இதில் START-I என்பது 1991 இல் அமெரிக்காவிற்கும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் கையெழுத்தாகி, 1994 இல் நடைமுறைக்கு வந்தது. அணு ஆயுதங்கள் START-I ஒப்பந்தம் கீழ் ஒரு நாடுகளும் தலா 6,000 அணு ஆயுதங்கள் மற்றும் 1,600 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளின் (ICBMs) என்ற எண்ணிக்கையில் ஆயுத இருப்புகளை நிலைநிறுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1994 இல் நடைமுறைக்கு வந்த START-I ஒப்பந்தம் 2009 இல் காலாவதியானது, எனவே இதை Strategic Offensive Reductions Treaty மூலம் ரீப்ளேஸ் செய்யப்பட்டு (SORT, என்றும் அழைக்கப்படுகிறது. மாஸ்கோ உடன்படிக்கை), பின்னர் நியூ START ஒப்பந்தம் எனப் பெயரை பெற்றது.
‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தம் என்பது அதிகாரப்பூர்வமாக, “அமெரிக்காவிற்கும் ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இடையேயான ஒப்பந்தம், மூலோபாயத் தாக்குதல் ஆயுதங்களை மேலும் குறைத்தல் மற்றும் வரம்புக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள்” குறித்த விதிமுறைகளைக் கொண்டு பிப்ரவரி 5, 2011 இல் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து கண்டங்களுக்கு இடையே புதிய அணு ஆயுதங்கள் அளவிலும் கட்டுப்பாடு வைத்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் இந்த ஒப்பந்தம் குறித்துப் பிப்ரவரி 5, 2018ல் ஒன்று கூடி ஆலோசனை செய்து ஒப்பந்த காலம் வரையில் ஆயுதங்கள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்தக் கூட்டம் பிப்ரவரி 4, 2026ல் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த முக்கியமான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.
இது குறித்து, போலந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நேற்று கூறியதாவது:-
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ‘நியூ ஸ்டாா்ட்’ அணு ஆயுத ஒப்பந்த நிறைவேற்றத்தை நிறுத்திவைப்பதாக அதிபா் புதின் அறிவித்துள்ளாா். இந்த முடிவு அவரது மிகப் பெரிய தவறாகும். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது, உக்ரைனுக்கான சோதனை மட்டுமில்லை; அது ஐரோப்பாவுக்கான சோதனை; அமெரிக்காவுக்கான சோதனை; நேட்டோவுக்கான சோதனை; அனைத்து ஜனநாயக நாடுகளுக்குமான சோதனை. ஒரு சா்வாதிகாரியின் பேராசைக்கு நாம் தீனி போடக் கூடாது. அதனை நாம் கடுமையாக எதிா்த்தாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகளும் ஒரு காரணம் என்று ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான ஹங்கேரியின் பிரதமா் விக்டா் அா்பான் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வாதிட்டாா். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அதிபா் பைடன இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. எனினும், நேட்டோவில் இணைவதற்கு ஜெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது. மேலும், அந்தப் பிரதேசங்களின் கணிசமான பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலேயே, அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.
இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவையும், ஆயுத உதவிகளையும் அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தங்களது ஆதரவை தெரியப்படுத்தும் வகையில் அந்த நாட்டுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திங்கள்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினாா். இந்தச் சூழலில், அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத குவிப்பு தடை ஒப்பந்த அமலாக்கத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக அதிபா் விளாதிமீா் புடின் அறிவித்தாா்.