பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். அதே நேரத்தில் பாஜக வலிமை பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
இது தொடர்பாக அண்ணமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவை மீண்டும் சட்ட சபையில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள். இனி ஆளுநர் திரும்பி அனுப்ப வாய்ப்பு இல்லை. கையெழுத்து போடத்தான் போகிறார். ஏனெனில் அதுதான் அரசியல் அமைப்பு சட்டம். ஆனால் ஒரே பயம் ஒரு முறையற்ற மசோதா மீண்டும் கோர்ட்டிற்கு போய் தடையாகி மறுபடியும் பிரச்சினை ஆகத்தான் போகிறது. ஆளுநரை பொறுத்தவரை கையெழுத்து போட வேண்டிய நிர்பந்தம் மட்டும் இல்லை. கட்டாயமும் இருக்கிறது அதுதான் அரசியல் அமைப்பு சட்டம்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்கள். இது குறித்து நிறைய பேசிவிட்டோம். இன்னும் 9 மாதங்கள் இருக்கிறது. நேரமும் காலமும் வரும் போது பேசுவோம்” என்றார்.
அப்போது அதிமுக – பாஜக கூட்டணியை முடிவு செய்ய வேண்டியது டெல்லி தலைமைதான் என்று இபிஎஸ் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “டெல்லி தலைமையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் பாஜக என்பது தொண்டர்களின் கட்சி. மற்ற கட்சி போல ஒரு தலைவர் வந்து 50 வருஷம் 60 வருஷம், 70 வருஷம் என்று இருப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. பாஜகவை பொறுத்தவரை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்கிறது. ஆட்சிமன்றக் குழுவில் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு மதிப்பு கொடுத்து கேட்டுவிட்டு முடிவு செய்வார்கள். இந்தக் கட்சியில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். அதே நேரத்தில் பாஜக பார்லிமெண்ட் போர்டில் இருக்கும் தலைவர்கள் எடுக்கும் முடிவு இந்தக் கட்சியை வலுப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கும். என்னை பொறுத்தவரை மாநில தலைவர் என்ற முறையில் எதுவாக இருந்தாலும் பாஜக வலிமை பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எந்த முடிவாக இருந்தாலும் கூட்டணி வேண்டாம், கூட்டணி வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு இல்லை. அதற்கு பார்லிமெண்ட் போர்டு உள்ளது. தலைவர்கள் இருக்கிறார்கள். எந்த முடிவாக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
