வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா?: மதுரை எம்பி சு.வெங்கடேசன்!

இந்தி தெரிந்தவர்களையே வந்தே பாரத் ரயிலுக்கு பணியமர்த்த உத்தரவு பிறப்பித்ததற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார துறைகளை ஊக்குவிப்பதற்காக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ரயில்கள் பயணிக்கும் இடங்களில் எல்லாம் சர்ச்சையும் கூடவே சேர்ந்து வருகின்றன. மாட்டின் மீது மோதிய ரயிலின் முன் பகுதிகள் சேதமடைந்தன. அதேபோல் வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைக்கும் போதெல்லாம் பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் உரையாடுவது வழக்கமாக உள்ளது. ஞாயிற்று கிழைமைகளில் கூட பள்ளி சீருடையில் மாணவர்களுடன் பிரதமர் உரையாடுவது விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தநிலையில் சென்னை முதல் கோயம்பத்தூர் வரை பயணிக்க கூடிய வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்க வருகிற 8ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இதுவாகும். தென்னிந்தியாவின் இரண்டாவது ‘வந்தே பாரத்’ ரயில் இது.

இந்தநிலையில் இந்தி தெரிந்தவர்களையே நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

சீனியர் லோகோ பைலட்களையே புதிய ரயில் துவங்கும் போது பணியமர்த்துவது வழக்கம். ஆனால் பிரதமர் பங்கேற்கும் சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சென்னை இரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.