காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது: அண்ணாமலை!

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. சேத்தியா தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது தமிழ்நாடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு கட்சியினரும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசு காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். தமிழக விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அண்ணாமலை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் சென்று பெங்களூரில் ஏப்ரல் 5ஆம் தேதி நேரில் சந்தித்தார். தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு அண்ணாமலை கடிதம் ஒன்றையும் அமைச்சரிடம் வழங்கியிருந்தார்.

மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள், பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் தமிழ்நாடு வரவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.