பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீண்டும் மீன் கடைகளை அமைத்து தர வேண்டும்: சசிகலா

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை காலி செய்து மீனவ மக்களை விரட்டி அடிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்றும் மீண்டும் மீன் கடைகளை அமைத்து தர வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னையில் மீனவர்கள் அன்றாடம் மீன் விற்பனை செய்யும் இடங்களில் பட்டினப்பாக்கம் லூப் சாலையும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது. எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் மீன் வியாபாரம் செய்து மீனவர்கள் தங்கள் வாழ்க்கையை காப்பாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் திடீரென்று நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, சென்னை மாநகராட்சி இங்குள்ள மீன் கடைகளை காலி செய்வது மீனவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. இது, இந்த ஆட்சியாளர்கள் மீனவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும்.

திமுக தலைமையிலான அரசு இதில் சரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இங்குள்ள மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்து வைத்து இருக்கலாமே? நீதியரசர்களுக்கு மீனவர்களின் நிலையினை சரியாக எடுத்து சொல்லியிருக்கவேண்டும். அவ்வாறு வாதங்களை எடுத்து வைத்து இருந்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு உத்தரவினை பெற்று இருக்க முடியும். அதை செய்ய தவறிவிட்டு இப்பொழுது நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி மீனவர்களின் வாழ்வை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்?

இந்த ஆட்சியாளர்கள், மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவீன மீன் அங்காடிகளை அமைத்து தர ஏன் முன் வரவில்லை? இந்த சாலைகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாமே? இவற்றையெல்லாம் செய்ய இந்த அரசுக்கு ஏன் மனம் வரவில்லை? அவ்வாறு செய்ய மனம் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் பட்டினப்பாக்கம் அணுகு சாலையில் நவீன மீன் அங்காடி அமைத்துத்தரும் வரையிலாவது மீன் கடைகள் தொடர்ந்து செயல்பட நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இருக்கலாமே? எனவே, மீனவர்கள் நலன் கருதி எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி மீனவர்களை உடனே காலிசெய்ய விரட்டி அடிப்பது ஒரு மனிதாபிமானமற்ற செயலாகத்தான் பார்க்கமுடிகிறது.

திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு ஒவ்வொருநாளும் தமிழக மக்களை ஏதாவது ஒரு துன்பத்திற்கு ஆளாக்குவது வாடிக்கையாகிவிட்டது. என்றைக்கு இந்த மக்கள் விரோத அரசு தொலைந்து, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பொற்கால ஆட்சி அமையுமோ அன்றுதான் தமிழக மக்களின் வாழ்வில் வெளிச்சம் வரும் என்பதை வரும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே. திமுக தலைமையிலான அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நவீன மீன் அங்காடியை விரைவில் அமைத்து தர வேண்டும் எனவும், அதுவரை அதே இடத்தில் மீன் கடைகள் தொடர்ந்து செயல்பட தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக சில மீனவர்கள் 3 படகுகளில் நேற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் பிடித்து வந்த மீன்களை நொச்சிக்குப்பம் பகுதி சர்வீஸ் சாலையில் வைத்து விற்பனை செய்தனர். இதையறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அந்த கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். உடனடியாக, மீனவர்கள் தாங்கள் விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள் மற்றும் நண்டுகளை சாலையில் வீசினர். இதனால் அங்கு திடீரென மீண்டும் போராட்டம் வெடித்தது. அவர்களுக்கு ஆதரவாக அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு சாலையோரத்திலும், தங்கள் கிராமங்களின் தெருக்களிலும் கருப்பு கொடியை கட்டியும், படகுகளை சாலையில் இழுத்து நிறுத்தியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் அதிகளவில் கூடினர். சாலையில் ஆங்காங்கே தாங்கள் வியாபாரத்துக்கு பயன்படுத்தும் ராட்சத குடைகளை நட்டு அதற்குள் பெண்கள் அமர்ந்து கொண்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை.

போராட்டம் குறித்து அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க நிறுவனத் தலைவர் எஸ்.ஏ.மகேஷ் கூறியதாவது:-

யாரையோ திருப்திபடுத்துவதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீனவர்களின் கடைகளை அப்புறப்படுத்தினர். மீனவர்களுக்கு சொந்தமான இந்த சாலையில், முதலில் 1 மணி நேரம் சாலையை பயன்படுத்த அனுமதி அளித்தோம், பின்னர் 2 மணி நேரமாக்கினார்கள். தற்போது 24 மணி நேரமும் வாகனங்கள் செல்கின்றன. இப்போது, எங்கள் மீனவர்களின் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதே போன்று, தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கடலோடி பாண்டியன் கூறும்போது, “முதலில் இந்த பகுதியில் சாலையே கிடையாது. பின்னர் கடல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக மண் சாலை போடப்பட்டது. பின்னர் அது தார் சாலையாக போடப்பட்டது. அதைதொடர்ந்து காங்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. நீதிபதிகள் இந்த சாலையில் பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது என்றால், அந்த நேரத்தில் இங்கு போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும். அதற்காக மீன் கடைகளை அகற்றக்கூடாது” என்றார்.