2வது முறை திருப்பி அனுப்பப்பட்ட சித்த மருத்துவ மசோதா: மா.சுப்ரமணியன்

தமிழ்நாடு சட்டசபையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை 2 வது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருப்பதாக தமிழ்நாடு சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.

சித்த மருத்துவத்திற்காக தமிழ்நாட்டில் முதல்முறையாக தனி பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க தமிழ்நாடு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. சித்த மருத்துவத்திற்கு தனி பல்கலைக்கழகம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கடந்த 2021 – 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். “தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க கருணாநிதி திட்டமிட்டார். அதற்கு தேவையான உரிய நிலமும் கண்டறியப்பட்டது. ஆனால், அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. சித்தாவிற்கும் மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப்போல் உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சித்தா பல்கலைகழகத்தை அரசு அமைக்கும்” என்று நிதியமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று உறுதி செய்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டசபையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக வேண்டி அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆர்.என்.ரவியோ அந்த மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு இருந்தார். நீட் தேர்வின் அடிப்படையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தேசிய தேர்வு முறைகளை ஏற்று அதன்படி நடக்குமா? என்று அவர் வினவி இருந்தார்

இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், மற்ற மருத்துவ பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படும் மருத்துவ நடைமுறைகளையே இதிலும் பின்பற்ற இருப்பதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி பதில் அளிக்கப்பட்டது. மற்ற மசோதாக்களை போலவே இந்த மசோதாவும் 6 மாதங்களுக்கு மேலாக ஒப்புதல் அளிக்கப்படாமல் இருந்த நிலையில், அதை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி இருப்பது தெரியவந்து உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் இதை தெரிவித்து உள்ளார்.