நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுப் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அதில் லேட்டஸ்ட் வரவாக இணைந்திருப்பது நியூசிலாந்து. இங்குள்ள கெர்மாடெக் தீவுப் பகுதியில் இன்று (ஏப்ரல் 24) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பூமியின் மேற்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தகவல் வெளியிட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவாகியிருக்கிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோமீட்டர் தூரம் வரை சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க அல்லது வேறு காரணங்களுக்காக சென்றவர்கள் உடனே கரை திரும்ப தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும் இதுவரை அதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று விஞ்ஞானிகள் பலரும் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.