உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களுடன் முதல் கப்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்தினருக்கும் கடந்த 15-ம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் இரு தரப்பும் அதற்கு கட்டுப்படவில்லை. தலைநகர் கார்ட்டூம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த சண்டையால் இதுவரை 427 பேர் உயிரிழந்ததாகவும், 3,700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சூடானில் சண்டையிடும் ராணுவத் தளபதிகள் இருவரும் 72 மணிநேர போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் நேற்று முன்தினம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “கடந்த 48 மணி நேர தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு, சூடான் ஆயுதப் படைகளும் (எஸ்ஏஎஃப்), துணை ராணுவப் படையும் (ஆர்எஸ்எஃப்) நாடு முழுவதும் 24-ம் தேதி நள்ளிரவு முதல் 72 மணி நேர போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டன” என்றார். போர் நிறுத்தம் அமலுக்கு வரும் 2 மணி நேரத்துக்கு முன்பு இந்த அறிவிப்பை பிளிங்கன் வெளியிட்டார்.
சூடானில் சுமார் 3,000 இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் முயற்சியில் வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு ‘ஆபரேஷன் காவேரி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி ‘ஐஎன்எஸ் சுமேதா’ கப்பலை போர்ட் சூடான் நகருக்கு இந்தியா அனுப்பியது. மேலும் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 விமானங்களை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி நேற்று தனது டுவிட்டர் பதிவில், ‘சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் குழு, ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் அங்கிருந்து வெளியேறியுள்ளது. ஐஎன்எஸ் சுமேதாகப்பல், 278 பேருடன் சூடான் துறைமுகத்தில் இருந்து ஜெட்டா நோக்கி புறப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தியர்கள் 278 பேரும் சவுதிஅரேபியாவின் ஜெட்டா நகரை அடைந்தவுடன், அங்கிருந்து விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.