ஸ்ரீபெரும்புதூரில் தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளதாக நடிகை கவுதமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் கவுதமி. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கறை பகுதியில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க.விலும் பொறுப்பில் உள்ளார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரியை சந்தித்து, அவரிடம் 9 பக்கங்கள் அடங்கிய புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் கவுதமி கூறியிருப்பதாவது:-
நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். கடந்த 2004-ம் ஆண்டு எனது மகளுக்கு 4 வயதாக இருக்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். நான் சினிமா தொழிலில் 17 வயது முதல் சம்பாதித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும். எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக இந்த இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான அதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாக கூறினார். நான் அவரை முழுமையாக நம்பினேன். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். இந்த பத்திரங்களை தவறான வழியில் பயன்படுத்தமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார்.
இந்த நிலையில் போலி ஆவணங்களை தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர். இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தந்து, அபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.