மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.06 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், எப்போது உரிமைத்தொகை கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பினர். இது பெரும் விவாதமாக எழுந்த நிலையில், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில் இதற்கான தயாரிப்பு பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்காது. மாறாக இதனை பெற சில அளவுகோல்களை அரசு அறிவித்துள்ளது. இப்படியாக தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டது. இப்படியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மூன்று கட்ட முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அரசு அளவுகோலின்படி தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை பெற 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் ரூ.1,000 உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என்பதால் இது ஒரு கோடி மக்களின் பாராட்டுகளுக்கு சமம் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.