‘எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கு இடமில்லை’ என கனிமொழி எம்.பி.யிடம் எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி மக்கள் உறுதி அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆக.25-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் மனைவி முனியசெல்வி (29) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 25-ம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையல் செய்து வருகிறார். இந்நிலையில், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவிகள் உணவை சாப்பிடாமல் தவிர்த்து வந்தனர். இதனால் காலை உணவு வீணாகும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த சமையலர் முனிய செல்வி, மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், வட்டாட்சியர் மல்லிகா, காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து, காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கு வந்த 11 மாணவ, மாணவிகளுக்கும், காலை உணவான வெண்பொங்கல் பரிமாறப்பட்டது. ஆனால், குழந்தைகள் உணவை அருந்தாமல் அழுது கொண்டே தட்டுகளுக்கு முன்பு அமர்ந்திருந்தனர். தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் நேரில் வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலை உணவு திட்ட சமையலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உங்களது கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களில் தனிநபர் விருப்பு வெறுப்புகளை திணிக்கக்கூடாது. அவர்களுக்கு அரசு திட்டம் முழுமையாக சென்றடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். அவர்களிடம் நாளை முதல் எங்களது குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் உணவு அருந்துவார்கள் என பெற்றோர் தெரிவித்தனர்.
இந்நிலையில், எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இன்று காலை கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்தனர். அப்போது பள்ளியில் குழந்தைகளிடம் படிப்பு, காலை உணவு உள்ளிட்டவைகள் குறித்து கனிமொழி எம்.பி., கேட்டறிந்தார். தொடர்ந்து, குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். பின்னர் ஊர் கமிட்டி தலைவர் முத்துவேல்சாமி மற்றும் கிராம மக்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். அப்போது “எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை. இங்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் தான் உள்ளோம். எங்களுக்குள் எந்தவித பாகுபாடும் கிடையாது” என்று உறுதி அளித்தனர். மேலும், “இங்கு நடந்தது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினை தான். இதில் சாதிப் பிரச்சினை என்றும் எதுவும் இல்லை” என்றனர்.
மேலும், “எங்கள் கிராமத்துக்கு சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் வேண்டும். பேருந்து வசதி செய்து தர வேண்டும். சமுதாய நலக்கூடம் மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும்” எனக் கனிமொழியிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம், “மக்களுக்கு தேவையான வசதிகள் ஒவ்வொன்றாக செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. உசிலம்பட்டி கிராமத்தில் தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலை உணவு திட்டம் என்பது மகத்தான ஒரு திட்டம். இது குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்டது. எனவே குழந்தைகளுக்கு கிடைக்க கூடிய உணவை யாரும் தடுக்க வேண்டாம்” என கனிமொழி எம்.பி கேட்டுக் கொண்டார்.