பகுஜன் சமாஜ் எம்.பி. டானிஷ் அலியை, நாடாளுமன்றத்தில் மிக கடுமையான சொற்களால் விமர்சித்த பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் கடிதம் எழுதி உள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. இதில் கடந்த 19-ம் தேதி மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவிலும், நேற்று முன்தினம் ராஜ்யசபாவிலும் அனைவர் ஆதரவோடு நிறைவேறியது. இந்த சூழலில் நேற்று முன்தினம் நடைபெற்ற லோக்சபா கூட்டத்தொடரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை எம்பிக்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள்தான் காரணம் என்பதால், எம்பிக்கள் அனைவரும் பாராட்டி பேசினார்கள். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி பேசிய விஷயம் நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத ஒன்று. மொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தெற்கு டெல்லி தொகுதி பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, ‘ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி’ என்றும், ‘பயங்கரவாதி’ என்றும் கூறினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவரது முன்பும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதால் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்டார். அதேநேரம் சபாநாயகர் ஓம் பிர்லாவும் பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியை கடுமையாக கண்டித்ததுடன், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இனி ஒருமுறை இப்படி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதேநேரம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி இந்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் எம்.பி. டானிஷ் அலியை, நாடாளுமன்றத்தில் மிக கடுமையான சொற்களால் விமர்சித்த பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதியுள்ள அந்த கடிதத்தில் “சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி அரசியல் கட்சி எம்பியான டேனிஷ் அலிக்கு எதிராக வெட்கக்கேடான தகாத மற்றும் பாராளுமன்றத்திற்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக டெல்லி எம்பி ரமேஷ் பிதுரிக்கு எதிராக விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.