கவர்னர் ஆட்சி என்றால் நிர்வாகமே தெரியாது: முதலமைச்சர் ஸ்டாலின்!

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கவர்னர் ஆட்சி என்றால் நிர்வாகமே தெரியாது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர்.

நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலை மற்றும் அறிவகம் கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

எப்போது பார்த்தாலும் முகம் மலர்ந்த சிரிப்புடன் இருக்கும் சிலம்பொலியாரைச் சிலையாகப் பார்க்கும்போதும், நேரில் பார்ப்பதைப் போன்றே இருக்கிறது. எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து வாழ்நாளெல்லாம் தமிழை விளைவித்த, ‘தமிழ் உழவர்’தான் நம்முடைய சிலம்பொலியார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி – பள்ளித் தலைமை ஆசிரியர் -மாவட்டக் கல்வி அலுவலர் – தமிழ் வளர்ச்சி இயக்குநர் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என வளர்ந்தார். கல்லூரியில் கணக்கு பாடம் படித்தாலும், இவர் தமிழ்ப் பற்றாளராக வளர்வதற்கு திராவிட இயக்கம் காரணமாக அமைந்துள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், குன்றக்குடி அடிகளார், தலைவர் கலைஞர் ஆகியோரின் உரைகளைக் கல்லூரிக் காலத்தில் கேட்டு உணர்ச்சி பெற்றார்.

திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த காலத்தில் ‘இந்தி இந்நாட்டுக்கு பொதுமொழியாக இருக்கலாமா?’ என்ற விவாதத்தில் கலந்து, ‘இருக்கக் கூடாது’ என்று பேசினார். கல்லூரி படிப்பைப் பற்றி கவலைப்படாமல் இத்தகைய உணர்ச்சியைப் பதிவு செய்தார். ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி மாவட்டக் கல்வி அலுவலராக உயர்ந்தார் சிலம்பொலியார். 1967-ஆம் ஆண்டு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார் அண்ணா. அப்போது மாநாட்டுத் தனி அலுவலராக சிலம்பொலி செல்லப்பனைத்தான் அண்ணா நியமித்தார். உலகத் தமிழ் மாநாட்டு மலரை உருவாக்கும் பொறுப்பும் அவருக்குத்தான் தரப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக இவர் பணியாற்றிய போது, இயக்குநர் பதவிக்கு இவர் விண்ணப்பிக்கவில்லை. “ஏன் விண்ணப்பிக்கவில்லை” என்று கேட்டவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர். 1976-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட போது, சிலம்பொலியாரைப் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பொறுப்பில் இருந்து தகுதி இறக்கம் செய்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்கியது அன்றைய கவர்னர் ஆட்சி. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கவர்னர் ஆட்சி என்றால் இப்படித்தான் நிர்வாகம் தெரியாமல் நடந்துள்ளது. 1989-ஆம் ஆண்டு கழக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக முதலமைச்சர் கலைஞர் நியமித்தார். பெருமைக்குரிய தமிழ் அடையாளமாக விளங்கும் சிலம்பொலியார் அவர்களுக்குச் சிலை அமைப்பது மிக மிக மகிழ்ச்சிக்குரியது. அதனை திறந்து வைப்பதை என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.இந்த வாய்ப்பை வழங்கிய விழாக் குழுவினர்க்கும் – சிலம்பொலியார் குடும்பத்தினர்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.