கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி, சமஸ்கிருதம் மட்டுமே தமிழ் மொழிக்கு இணையான ஒரே மொழி என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் சில கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்புவது உண்டு. சில மாதங்களுக்கு முன்பு நடந்த விழாவில், இப்படி தான் அந்நிய முதலீடு குறித்தும் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி முறை குறித்தும் பேசியிருந்தார். அதேபோல சமீபத்தில் நீட் விலக்கை நிச்சயம் தர மாட்டேன் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்
இதற்கிடையே ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற “எண்ணித் துணிக” என்ற நிகழ்ச்சியில் மாநிலத்தில் உள்ள தலைசிறந்த ஆளுமைகளுடன் ஆளுநர் ஆர் என் ரவி உரையாடினார். மேலும், 42 தமிழ் ஆளுமைகளுக்குத் திருமுறைத் திருமகன், திருமுறைத் திருமகள் விருதுகளை ஆளுநர் ரவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி கூறியதாவது:-
தமிழ் மொழிக்கு இணையாக இங்கே வேறு எந்த ஐரோப்பிய மொழிகளும் இல்லை. தமிழ் மொழிக்குச் சற்று இணையான மொழி என்றால் அது சமஸ்கிருதம் மட்டுமே. இங்கே வேறு எந்த மொழியும் தமிழுக்கு இணையானது இல்லை. அதேபோல அறம் என்ற தமிழ்ச் சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு இணையாக ஒரு சொல் வேறு எந்தவொரு ஐரோப்பிய மொழியிலும் இல்லை. இப்படி நம்மால் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். மேலும், கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மிகம் எனச் சிலர் நினைக்கிறார்கள். அப்படியில்லை. உலகில் இருக்கும் எந்தவொரு உயிரினம் கஷ்டப்படும் போதும் அதைப் பார்த்து கவலை கொண்டால்.. அதுவும் ஆன்மீகம் தான்.
நான் இப்போது தமிழ் மொழியைத் தீவிரமாக கற்று வருகிறேன்.. நான் ஆளுநராக இருக்கிறேனோ இல்லையோ தமிழ் மொழியைத் தொடர்ந்து கற்பேன்.. அதையே இப்போது நான் எனது வாழ்நாள் லட்சியமாக மாற்றிக் கொண்டுள்ளேன். தமிழ் மொழியை கற்பதில் நான் இப்போது தத்தி தத்தி நடக்கும் குழந்தை போல இருக்கிறேன் என்பது முக்கியம் இல்லை. நான் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கிவிட்டேன் என்பதே முக்கியம். அதைக் குறிப்பிடவே விரும்புகிறேன். இங்கே தமிழ்நாட்டிற்கு வரும் முன்பு எனக்குத் தமிழ் மொழி குறித்துத் தெரியாது. இந்த தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் இலக்கியங்கள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. இங்கு வந்த பிறகே அது குறித்துத் தெரிந்து கொண்டேன். முதலில் இங்கு வந்ததும் நான் திருக்குறளைப் படிக்க ஆரம்பித்தேன். முதலில் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பையே நான் படித்தேன். அதைப் படிக்கும் போதே எனக்குத் தமிழ் மொழி மீது ஆழமான அன்பும் மரியாதையும் ஏற்பட்டது. உலகின் எந்த பகுதியிலும் மொழிதான் எப்போதும் மக்களின் ஆன்மாவாக இருக்கிறது. மக்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை இந்த மொழி தான் விளக்குகிறது. இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்தார்.