அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: வானதி சீனிவாசன்!

அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்றது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அதிமுக நிர்வாகிகள் சந்திப்பின்போது நான் கூட இல்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும், அண்ணாமலை, தனது கருத்தில் உறுதியாக இருந்தார். தான் நடந்த சம்பவத்தையே கூறியதாகவும், மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் தெரிவித்தார். இது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியது. திடீரென செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு என கூறினார்.

இதனையடுத்து இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவின் முன்னணி தலைவர்கள் நேற்று மாலை டெல்லி சென்றனர். அதிமுக தலைவர்களை அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நிலையில், இது தொடர்பாக பாஜக தலைமையிடம் முறையிடுவதற்காக அவர்கள் டெல்லி சென்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசுவதற்காக அவர்கள் சென்றனர். ஆனால், அமித் ஷா அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி. முனுசாமி, அதிமுக எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்றும், அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவின் அடுத்தகட்ட திட்டம் என்ன, பாஜக தேசிய தலைவர், அதிமுக நிர்வாகிகளிடம் வேறு விஷயங்கள் பற்றி பேசினாரா என்பது பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் டெல்லி சென்றிருந்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழகம் திரும்பினார். விமான நிலையத்திற்கு வந்த வானதி சீனிவாசனிடம் அதிமுக – பாஜக மோதல் தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வானதி சீனிவாசன் கூறியதாவது:-

நான் பேச்சுவார்த்தையின்போது உடன் இருந்ததாக தவறான செய்தி பரவியுள்ளது. நான் கட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தேன். எனக்கு எதுவும் தெரியாது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவரை சந்தித்தது பற்றி எனக்குத் தெரியாது. செய்திகளை பார்த்துவிட்டு எனக்கு சிலர் போன் செய்து கேட்டார்கள். அப்போதுதான் அவர்கள் டெல்லி வந்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்றது பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. எனது தொகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நடைபெறவுள்ளது, அதற்காக அவசரமாக திரும்பிவிட்டேன். கூட்டணி பற்றிய முடிவு தேசிய தலைமை அறிவிக்கும் முடிவு. தேசிய தலைமை எனக்கு வேறு வேலை கொடுத்திருக்கிறது. தேசிய மகளிரணி தலைவியாக நிறைய திட்டங்கள் இருக்கிறது. அது தொடர்பான மீட்டிங்கை முடித்ததும் நேராக இங்குதான் வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.