ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து: 120 பேர் பலி!

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மணமக்கள் உள்பட 120 பேர் உடல் கருகி பலியாகினர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 335 கி.மீ வடமேற்கே உள்ள நினேவே மாகாணத்தில் அமைந்துள்ளது அல்-ஹம்தானியா நகரம். இங்கு கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி மணமக்களின் உற்றார்-உறவினர், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் மண்டபத்தில் குவிந்திருந்தனர். இதனால் திருமண விழா களைகட்டியிருந்தது. மணமக்கள் இருவரும் மேடையில் ஒய்யார நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக மண்டபத்துக்குள் பட்டாசுகளை வெடித்தனர். அப்போது மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார விளக்குகளில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த கண்இமைக்கும் நேரத்தில் மண்டபம் முழுவதிலும் பரவியது. இதனால் மண்படத்தில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மணமக்கள் உள்பட அனைவரும் அலறியடித்தபடி அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். எனினும் மாண்டபத்தில் நாலாபுறமும் தீ சூழ்ந்து கொண்டதால் அவர்களால் வெளியேறமுடியவில்லை.

இதற்கிடையில் தீ விபத்தின் காரணமாக மண்டபத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த கோர விபத்தில் மணமக்கள் உள்பட 120 பேர் உடல் கருகி பலியாகினர். உயிரிழந்தவர்கள் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனிடையே விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீர் மற்றும் ராசயான கலவையை பீய்ச்சி அடித்து தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

திருமண மண்டப கட்டிடம் தரமற்ற கலவையால் கட்டப்பட்டதாலும், மண்டபம் முழுவதும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாலும் அசம்பாவிதம் நேர்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஈராக் பிரதமர் சியா அல்-சுடானி விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். நினேவே மாகாண கவர்னர் நஜின் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க பரிசீலிக்கப்படும் என்றார்.