தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருந்தார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் உட்பட 10 மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து தமிழக சட்டப்பேரவையில் அந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ரவி தாமதப்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக பேச ஆளுநர் அண்மையில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று ஆளுநரை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஆளுநர் சந்திப்பு தொடர்பாக ராஜ் பவன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “முதல்வர் உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. மாநிலம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தனது முழு அர்ப்பணிப்பை இந்த சந்திப்பின்போது ஆளுநர் உறுதி செய்தார். அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்” என ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.