“பாஜக கட்சியின் கொள்கைகளை பிடித்து, உன்னதமான உணர்வோடுதான் பிற கட்சியினர் இணைகின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பண பேரம் என கூறுகின்றனர்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ‘இன்று மாலை 5 மணிக்கு பாஜகவில் முக்கியத் தலைவர்கள் இணைவதாக கூறப்படுகிறதே’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “பாஜகவின் இணையும் அத்தனை பேரும் பாஜகவின் கொள்கைகளைப் பிடித்து வருகின்றனர். அதோடு, எங்களுடைய கட்சி புதிதாக வருபவர்களுக்கு கூட அதிகமான வாய்ப்புகளை வழங்குகின்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இந்தக் கட்சி நாட்டினுடைய வளர்ச்சிக்காக பாடுபடுகிறது என்கின்ற உன்னதமான உணர்வோடு வருகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பண பேரம் என்று சொல்கின்றனர். மற்ற கட்சியினரை இழுக்குறோம் என்றால் அவர்கள் விருப்பம் இல்லை என்றால் வர முடியாது. பாஜகவில் இணைந்தால் அரசியல் லட்சியங்களை நிறைவேற முடியும் என்பதால் இணைகின்றனர்.
பாஜகவில் யார் இணைகின்றார், அவர் எத்தனை அடி உயரத்தில் இருப்பார், அவர் எந்த நேரத்தில் வேட்டி கட்டுவார், புடவை கட்டுவார் என்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? இன்னும் கொஞ்ச நேரம்தான். பொறுங்க. இன்னும் 4 மணி நேரத்தில் தெரிந்து விடும். ஊடகங்கள் இல்லாமல் யாரையும் இணைக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த விஜயதரணிக்கு உழைப்பு, திறமை அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும். கட்சித் தலைமை அவருக்கு என்ன பதவி வழங்கலாம் என்பதை முடிவு செய்யும்” என்றார் வானதி சீனிவாசன்.