ராமநாதபுரம்: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடவுள்ள நிலையில், அவரது பெயரிலேயே 4 சுயேச்சைகள் களத்தில் இறங்கி அவருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சூழலில், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த அவர்களிடம் நிருபர்கள் பேட்டி கண்ட போது அவர்கள் தெறித்து ஓடியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள ஓ. பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதியை மட்டுமே ஒதுக்கி ஷாக் தந்தது அக்கட்சி தலைமை. 3 சீட்டுகளை ஓபிஎஸ் கேட்ட நிலையில், அவருக்கு ஒரே ஒரு சீட் மட்டுமே வழங்கியது பாஜக. அதிமுகவில் இருந்து விலகி தனது பலத்தை காட்ட நினைத்த ஓபிஎஸ்க்கு இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலில், ராமநாதபுரம் தொகுதியிலாவது நம் செல்வாக்கை காட்டலாம் என மனதை தேற்றிக் கொண்டிருந்த ஓபிஎஸ்-க்கு மீண்டும் ஷாக் கொடுத்திருக்கிறார்கள் 4 பேர். ஆம், ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரை கொண்ட 4 வேட்பாளர்கள் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் ஒரிஜினல் ஓபிஎஸ்-க்கு எதிராக ஒரே ஒரு சுயேட்சை ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், நேற்று மேலும் 3 ஓபிஎஸ்கள் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் பணம் கொடுத்து, ஒரே பெயரை கொண்ட வேட்பாளர்களை களமிறக்கி இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைக்கு அந்த 4 சுயேட்சை ஓபிஎஸ்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர், வெளியே வந்த ஓபிஎஸ்களை தனித்தனியாக மடக்கிய நிருபர்கள், தங்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். எதற்காக தேர்தலில் நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு கூட பதிலளிக்க தெரியாமல், அருகில் இருந்த நபரை பார்த்து திருதிருவென விழித்த அவர்கள், அடித்தோம் பிடித்தோம் என்று அலறியடித்துக் கொண்டு ஓடினர். நீங்களாக தானே தேர்தலில் நிற்கிறீர்கள் என்று கேட்ட செய்தியாளர்களிடம், அதை பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாதுங்க என்று கூறிவிட்டு தெறித்து ஓடினர் 4 சுயேட்சை ஓபிஎஸ்களும். இதை பார்க்கும் போது, உண்மையிலேயே இவர்களை எதிரணியைச் சேர்ந்தவர்கள் தான் தேர்தலில் நிற்க சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.