அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், 2023ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் அமலாக்கத் துறையினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். குற்றப் பத்திரிக்கை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி மனு மீதான உத்தரவை மார்ச் 28ஆம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்கக் கோரி, செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் கிடைத்த பின், அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும், அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனது நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.