கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதற்கு அண்ணா திமுக, நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை லோக்சபா தொகுதியில் திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன், பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்பு மனு தேர்தல் ஆணைய இணையப் பக்கத்தில் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
பாஜகவின் அண்ணாமலை தமது வேட்பு மனுவில் தெரிவித்திருந்த சொத்து மதிப்பு: அசையும் சொத்து- ரூ36,41,000; அசையா சொத்து- ரூ1.12 கோடி. மனைவி அகிலா பெயரில் அசையும் சொத்து- ரூ 2.3 கோடி; மனைவி அகிலா பெயரில் அசையா சொத்து: ரூ53 லட்சம். அண்ணாமலை மீது மொத்தம் 24 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாமலைக்கான வாக்கு எந்த தொகுதியில் இருக்கிறது என்பது தெரிவிக்கப்படவில்லை; அண்ணாமலையின் வேட்பு மனுவும் முழுமையாக முறையாகவும் நிரப்பப்படவில்லை; ஆகையால் அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணைய கையேட்டில் உள்ள விதிகளை சுட்டிக்காட்டியும் இந்த வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் சிறிது நேரம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக ஏற்கனவே தேர்தல் அதிகாரி அறிவித்திருந்ததால் பிரச்சனை ஒருவழியாக ஓய்ந்தது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கோவையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பிஆர் நடராஜன் 571,150 வாக்குகளையும் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளையும் மநீம மகேந்திரன் 1,45,104 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இம்முறை திமுக கூட்டணியில் மநீம இணைந்துள்ளது; பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.