தூத்துக்குடியில் காரசாரமான விவாதங்களுக்கு பிறகு கனிமொழி வேட்புமனு ஏற்பு!

தூத்துக்குடியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில் 43 வேட்பாளர்கள், 53 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா முன்னிலை வகித்தார். இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி மனு மீதான விசாரணையின் போது, வேட்புமனுவில் படிப்பை தவறாக தெரிவித்து இருப்பதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர். அப்போது, மனுவை நிராகரிப்பதற்கு படிப்பை காரணமாக ஏற்க முடியாது என்று கூறி அவரது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக் கொண்டார்.

அதன்பிறகு திமுக வேட்பாளர் கனிமொழி மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அதிமுகவினர் 2ஜி வழக்கு விசாரணை கோர்ட்டில் மீண்டும் நடப்பதால், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் காரசாரமான விவாதங்களை முன்வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கனிமொழி மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதி ஏற்றுக்கொண்டார்.