22 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்: ரூ 150 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்ய ர 150 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனால் பெங்களூரில் பிழைப்புக்காக சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட பக்கத்தில் உள்ள மால்களுக்கு செல்லும் நிலை இருந்தது. இதனால் தோட்டங்களுக்கு தண்ணீர் விட்டு வீணடிக்கக் கூடாது என்றும் வாகனங்களை தண்ணீர் விட்டு கழுவக் கூடாது என்றும் கர்நாடகாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

அந்த வகையில் சென்னையிலும் கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் முழு கொள்ளளவில் கடந்த வார நிலவரப்படி 57 சதவீதம் மட்டுமே நீர் இருந்தது. பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.2 டிஎம்சியாக இருந்தது. தற்போது வீராணம் ஏரி வற்றிவிட்டது. தமிழகத்தில் கடலூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் வெயில் அதிகமாகவே வாட்டி எடுக்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சத்தை போக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்திற்கு ரூ 150 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பற்றாக்குறை மாவட்டங்களில குடிநீர் விநியோகத்திற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின்விநியோகம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.