கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு ஓட்டளிக்க முடியாத நிலையில் சுதந்திர கண்ணன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதையடுத்து ஓட்டுப்பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக ‛ஸ்ட்ராங்’ அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 7 கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்த பிறகு ஜுன் 4ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வெளியே எடுக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் கோவை லோக்சபா தேர்தல் முடிவுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியாற்றி வருகிறேன். லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க கோவை வந்தபோது எனது பெயரும், எனது மனைவியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. நாங்கள் கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் வாக்களித்த நிலையில் இப்போது வாக்காளர் பட்டியலில் எங்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே முகவரியில் உள்ள தங்களின் மகளின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது.

மேலும் எங்களை போல் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை எதுவும் இன்றி பெயர்களை நீக்கி உள்ளனர். இதுபற்றி கடந்த 15ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் இ-மெயிலில் புகாரளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பெயர் நீக்கப்பட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை லோக்சபா தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் கோவை லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகுமா? இல்லையா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவை லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

முன்னதாக கோவை லோக்சபா தேர்தலில் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் சுதந்திர கண்ணன் என்பவர் கோவை லோக்சபா தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.