கணேசமூர்த்தியின் இழப்பு சொல்லொண்ணா துயரத்தை தருகிறது: தலைவர்கள் இரங்கல்!

“கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திராவிட முன்னேற்ற கழகத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட ஆற்றியவர். பின்னர் அண்ணன் வைகோ உடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தளகர்த்தராக செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொண்ணா துயரத்தை தருகிறது. அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்க பற்றாளர்களுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில், “ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான அ.கணேசமூர்த்தி அவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
கணேசமூர்த்தி அவர்கள் குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் அண்ணன் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” எனத் தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். திராவிட இயக்க கொள்கையால் ஈர்க்கப்பட்டு களப்பணிகளில் முன்னணியில் இயங்கியவர். பொடா வழக்கு பெற்று சிறை சென்று மீண்டவர். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர். ஈரோடு தொகுதியின் வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்டவர். அவருடைய மறைவு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மதிமுகவின் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.