நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!

நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக் காக்க வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடவும் ஒரு சுயநலக் குழு முயன்று வருகிறது. அரசியல் வழக்குகளில் குறிப்பாக, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல் பிரமுகர்களின் வழக்குகளில் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி நடக்கிறது. இதுபோன்ற அழுத்தங்கள் நீதிமன்றத்தை பாதிக்கக்கூடியவை; ஜனநாயக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவை.

இந்த குழு பல வழிகளில் செயல்படுகிறது. கடந்த காலம்தான் சிறப்பானது என்றும், கடந்த காலம் பொற்காலம் என்றும் தவறான கருத்தை உருவாக்க இக்குழு முயல்கிறது. நீதிமன்றங்களின் முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பகலில் அரசியல்வாதிகளை பாதுகாப்பவர்களாகவும், இரவில் சமூக ஊடகங்கள் மூலம் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பவர்களாகவும் சில வழக்கறிஞர்கள் இயங்குகிறார்கள். கடந்த காலங்களில் நீதிமன்றங்களில் செல்வாக்கு செலுத்துவது எளிதாக இருந்தது என்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கோமாளித்தனமான நம்பிக்கைகள் சூழலை கெடுப்பதாக உள்ளன. நீதித்துறையின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் நீதிமன்றங்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல் என்றே கருத முடியும்.

சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும் நிலைக்கு அவர்கள் நமது நீதிமன்றங்களை தள்ளுகிறார்கள். எனவே, அரசியல் மற்றும் தொழில்முறை அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காப்பது மிகவும் முக்கியம். அமைதியாக இருப்பது அல்லது எதுவும் செய்யாமல் இருப்பது, தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கு இயல்பாக அதிக சக்தியை அளிக்கும். இது போன்ற முயற்சிகள் சில வருடங்களாக அடிக்கடி நடந்து வருவதால், கண்ணியமான மவுனம் காப்பதற்கான நேரம் இதுவல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல், பிங்கி ஆனந்த், ஹிதேஷ் ஜெயின், உஜ்வாலா பவார், உதய் ஹொல்லா, உதய் ஹொல்லா உள்ளிட்ட வழக்கறிஞர்களும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கடிதத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட வழக்கு குறித்தும் விவரிக்கப்படவில்லை என்றபோதிலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை அடுத்து எழும் பல்வேறு கேள்விகளின் பின்னால் இருக்கும் உள்நோக்கம் குறித்து சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.