உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் “கணிக்க முடியாத விளைவுகள்” ஏற்படும் என ரஷியா எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசு தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றினால், “கணிக்க முடியாத விளைவுகள்” ஏற்படும் என அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுடனான ஏழு வாரப் போரில் 2500 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆனால், பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போரின் எட்டாவது வாரத்தில் 19,000 முதல் 20,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு ரஷியா வலியுறுத்தி உள்ளது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ரஷியா எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று கருங்கடலில் ரஷியாவின் முக்கிய போர்க்கப்பலான மாஸ்கோவா மூழ்கியது.
ரஷியா உக்ரைன் போர் 52 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் கருங்கடல் பகுதியில் ரஷியாவின் முக்கிய போர்க்கப்பலான மாஸ்கோவா வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாக ரஷியா தெரிவித்தது. மேலும் கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்தது. ஆனால் உக்ரைன் ராணுவமோ தனது நெப்டியூன் ஏவுகணை மூலம் மாஸ்கோவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான மாஸ்கோவா தாக்கி அழித்ததாக கூறுகிறது.
இந்நிலையில், ரஷிய தொலைக்காட்சி ஒன்று தற்போது நடப்பது மூன்றாம் உலகப்போர் என தெரிவித்துள்ளது. ரஷியாவின் ஊடகமான ரஷ்யா 1 தொலைக்காட்சி கூறியதாவது:-
இத்தனை நாட்களாக நடந்து வரும் போர் உக்ரைனுக்கு எதிரான போர் இல்லை, நேட்டோ நாடுகளுக்கு எதிரான போர். மாஸ்கோவா கப்பல் மூழ்கியதற்கு பின் இந்த போர் தீவிரமடைந்திருப்பதை நாம் நிச்சயம் மூன்றாம் உலகப்போர் என்று தான் அழைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளது.