இலங்கையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

இலங்கையில் அதிபர் மாளிகை முன்பு குவிந்துள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி அதிபர் மாளிகை முன்பு உள்ள காலி திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்து முற்றுகை போராட்டத்தை தொடங்கினர். கூடாரங்கள் அமைத்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரும் அவர்களது போராட்டம் இன்று 9-வது நாளாக நீடிக்கிறது. இப்போராட்டத்துக்கு இளைஞர்கள், மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவது அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்த பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் கோரிக்கையை போராட்டக்காரர்கள் நிராகரித்து விட்டனர். அரசாங்கத்தில் ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர்.

ஏற்கனவே நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிபர் மாளிகை முற்றுகை போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அதிபர் மாளிகை முன்பு ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருகிற 18-ந்தேதி காலி திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை அந்தப் பகுதியில் இருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் மாளிகை முன்பு திரண்டுள்ள இளைஞர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்படலாம். இதனால் இலங்கை போராட்ட களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.