அறுபதிலும் அழகாய் இருக்க வேண்டுமா?

இளைய வயதினர் மட்டுமே உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருக்கலாம். வயதானவர்களாகிய நாம் இனி உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருந்து என்ன பயன்? என்று பலர் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் தவறாகும். இறைவன் அளித்த இந்த உடலை, இறுதி மூச்சு உள்ளவரையிலும் அழகாகவும், அளவாகவும் வைத்திருக்க வேண்டும். வயதானவர்கள் இதில் அக்கறையும், முயற்சியும் செலுத்த முடியும்.

உடலை வருத்திப் பணியாற்றினால் உறுதியான உடற்கட்டும், நோயற்ற வாழ்வும் பெறலாம் என்ற பழமொழி இன்று பழங்கதையாக, பகற்கனவாக ஆகிவிட்டது. உடலுக்கு வேலை தராமல், உல்லாச வாழ்க்கை நடத்துவோரின் எண்ணிக்கை இன்று பன்மடங்காகப் பெருகிவிட்டது. தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், சினிமா, வாக்வம் கிளீனர், வாஷிங்மெஷின், இரு சக்கர வாகனங்கள், தொலைபேசி, அலைபேசி போன்ற அறிவியல் சாதனங்கள் மனித குலத்தைப் பெரிதும் மாற்றியமைத்து விட்டன. அறிவியல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்படாத அரைவை இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில் நெல்லை உரலில் போட்டு உலக்கையால் குற்றி அரிசியாக்கினார்கள். மாவு ஆட்டும் கல்லில் மாவு அரைத்தார்கள். தரையில் படிந்துள்ள அழுக்குகளைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்தார்கள். வேலைகளே அவர்களுக்கு உடற்பயிற்சிகளாக அன்று அமைந்து விட்டன. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணியாற்றும் ஆண்களும், பெண்களும், உடலை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். பரபரப்பும், சுறுசுறுப்பும் வேகமும் நிறைந்த இந்த உலகத்தில் மெதுவாகச் செல்பவர்கள் மிகக் குறைவு. காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடிக்கும் வரையிலும், அதன்பின் பேருந்தைப் பிடித்து அலுவலகத்தை எட்டும் வரையிலும், வீடு திரும்பும்போது ஜன நெருக்கடியில் சிக்கித் திணறி ஒரு வழியாக வீடு வந்து சேரும் வரையிலும் வேகம், வேகம், வேகம்தான். ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? என்று எண்ணுவதற்குக் கூட நேரமில்லாமல் போய் விட்டது.

பணி நிறைவு பெற்றவர்களாகிய நீங்கள் வீட்டிலே எவ்வளவு நேரம்தான் அடைந்து கிடப்பீர்கள்? கடைவீதி, நூலகம், பூங்கா என்று சென்றுவிட்டு வீட்டுக்கு வருகிறீர்கள். வீட்டுக்கு வந்தால் உங்களால் அமைதியாக இருக்க முடிகிறதா? பேரன் பேத்திகளின் தொல்லை ஒரு புறம். இல்லத்தரசியின் இனிய கர்ஜனை ஒரு புறம். மருமகள்களின் இடி முழக்கங்கள் ஒருபுறம்! இவைகளை மறக்க தொலைக்காட்சி முன்னால் அமர்கின்றீர்கள். சேனலை மாற்றி மாற்றிப் போடுகின்றீர்கள். எந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கின்றதோ, அந்த நிகழ்ச்சிக்குரிய சேனலைப் போடுகின்றீர்கள். இதிலும் பரபரப்பு காட்டுகின்றீர்கள். இந்தப் பரபரப்பு தேவைதானா?

மனிதர்களுக்கு அமைதி என்பது இல்லாமலேயே போய்விட்டது. இதனால் கணக்கில்லாத நோய்கள் மனிதர்களைத் தாக்கத் தொடங்கிவிட்டன. மனித வரலாற்றிலேயே என்றுமில்லாத அளவுக்கு இன்று இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

அரசியலில் போட்டி, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளில் போட்டி, அலுவலகத்தில் போட்டி, காணுமிடமெல்லாம் போட்டி என்று எங்கு பார்த்தாலும் போட்டி மனப்பான்மை மிகுந்திருப்பதால் மனிதர்களுக்கு உளவியல் பாதிப்புகள் மிகுந்துள்ளன. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நம்மை விட்டுப் போனதால் பிணிகள் நம்மை தொட்டுக் கொண்டு நிற்கின்றன. கட்டுக்கட்டாக பணத்தைச் செலவு செய்தாலும், சட்டென்று குணமாவதில்லை.

நீங்கள் நல்ல முறையில் அழகான உடலமைப்பைப் பெற்றுப் பிணியில்லாமல் வாழ வேண்டுமா? நான் சில எளிய உடற்பயிற்சிகளை இக்கட்டுரையில் கூறுகிறேன். இவைகளை நீங்கள் தினமும் ஒழுங்காகச் செய்து வந்தாலே போதும். நீங்கள் அழகாக இருக்கலாம். அளவோடு இருக்கலாம். தினம் தோறும் நீங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனதில் அமைதி கிடைக்கிறது. புதிய உற்சாகம் பிறக்கிறது. ரத்த ஓட்டம் சிரடைகிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உடலில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சேர்ந்திருந்தால், அது உடற்பயிற்சியின் மூலம் கரைகிறது. தேவையற்ற கொழுப்புச் சத்து குறைந்தாலே போதும், நீங்கள் அழகாக இருக்கலாமே!

கழுத்தில், இடுப்பில், தொடையில், வயிற்றில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடலின் அழகு உருக்குலைந்து விடும். மேலும் இந்தக் கொழுப்பு இதயத்தைப் பாதிக்கும் எமனாக வந்து சேர்கிறது. எனவே இந்தக் கொழுப்பை விரட்டியடிக்கும் பயிற்சியில் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். வயதானவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொழுப்பு சேர்ந்து விடும். இதை நீங்கள் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிகவும் சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. தினந்தோறும் அதிகாலையில் 4 அல்லது 5 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சியில் ஈடுபடலாம். சில ஆசனங்களைச் செய்தால் கொழுப்புச் சத்து கரைந்து விடும். ஆனால் அந்த ஆசனங்களை விட மிகவும் எளிமையான உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த உடற்பயிற்சிகளை நான் உருவாக்கிப் பல ஆண்டுகள் வரை பலருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். வயதானவர்கள் இப்பயிற்சிகளைச் செய்யும் போது, கணிசமான அளவுக்கு அவர்களுடைய எடை குறைந்து சுறுசுறுப்பு மேலோங்குவதைக் கண்டிருக்கிறேன்.

இந்த உடற்பயிற்சிகளை எந்தவிதப் பயமின்றி நீங்கள் இடைவிடாமல் செய்து வரலாம். முதலில் தொடையிலும், பின் பகுதியிலும் காணப்படும் அதிகமான கொழுப்பைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைப் பார்ப்போம்.

முதலில் நீங்கள் நேராக நின்று கொள்ளுங்கள். கால்களைக் கொஞ்சம் (1 அடி) அகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மாவீரன் போஸில் நின்று கொள்ளுங்கள். தலையை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகவும், வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகவும் மாற்றி மாற்றி 20 முறை செய்ய வேண்டும். இடப்பக்கத்தில் ஆரம்பியுங்கள். கொஞ்சம் தலையைத் தாழ்த்தி வலப்பக்கத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.

மீண்டும் இடது பக்கத்திற்குக் கொண்டு செல்லுங்கள். இது ஒன்று… இப்படியாக இருபது வரை செய்ய வேண்டும். இதை நிதானமாகச் செய்ய வேண்டும். அவசரம் அவசரமாக இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது.

அடுத்து நான் செய்ய மாட்டேன் என்ற பாவனையில், இடப்பக்கமிருந்து வலது பக்கத்திற்குத் தலையை ஆட்ட வேண்டும். அதையும் 20 முறை செய்ய வேண்டும். பெண்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் பிடிக்கும்.

அடுத்து மாவு ஆட்டும் கல்லில், கல்லானது வட்டமாகச் சுழன்று வருவதைப் போலத் தலையைச் சுழலச் செய்ய வேண்டும். இதை 10 முறை செய்தால் போதுமானது. நிதானமாகச் செய்ய வேண்டும். வேகம் கூடாது. செக்கு மாடு போலச் சுழன்று வர வேண்டும். ஆண்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் அழகாக வருமே!

அடுத்து தலையை இடப்பக்கமிருந்து நேராக வலப்பக்கம் சென்று மீண்டும் இடப்பக்கத்திற்குக் கொண்டு வாருங்கள், “கேட்க மாட்டேன்” என்ற பாவனையில். பின் அப்படியே தலையைத் தூக்கிப் பின் கீழே கவிழ்த்து மீண்டும் மேலே கொண்டு வாருங்கள். (அதாவது + வடிவத்தில் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்). 10 முறை செய்தால் போதுமானது. பெண்களுக்கு இந்தப் பயிற்சி அழகாக வருமே!

இடுப்பையும், பின் பகுதியையும் வலிமைப்படுத்தி வனப்பை நல்கும் உடற்பயிற்சிகள் உள்ளன. இப்பயிற்சிகள் அனைவருக்கும் பொதுவானவைதான்! இருப்பினும் ஆண்களை விடப் பெண்களுக்குப் பலனளிக்கக் கூடியவை. இடுப்பையும் பின் பகுதியையும் வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகள்

1. இடது பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள், வலது காலை மடக்கிக் கொண்டு, இடது காலை தலை வரை உயர்த்தி நீட்டுங்கள். முழங்கால்களைப் பின்னோக்கி மடக்க வேண்டும். அதன் பின் வலது காலை நீட்டி மடக்க வேண்டும். இவ்வாறு 20 முறை செய்யவும். கால் தரையில் படக் கூடாது.

2. மேற்சொன்னவாறு படுத்துக் கொண்டு வலது காலை உயர்த்திக் கீழே இறக்கவும். கீழே இறக்கும் போது வலது கால் தரையில் படக் கூடாது இவ்வாறு 20 முறை செய்யவும். (குறைந்தது 10 முறையாவது செய்ய வேண்டும்.)

3. இப்போது வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு மேலே கூறப்பட்டுள்ள இரண்டு உடற்பயிற்சிகளையும் செய்யவும்.

வயிற்றை வலுவாக்கும் உடற்பயிற்சி:

சிலருக்கு வயிறு தொங்கிக் கொண்டு, தளர்ச்சியாக பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். அப்படிப்பட்ட அமைப்புடையவர்கள் கீழ்க்காணும் உடற்பயிற்சியைச் செய்து பலன் பெறலாம். மல்லாந்து படுத்துக் கொள்ளவும். முழங்காலை மடக்கிக் கொள்ளவும். உடலைச் சுழற்றி உயர்த்தவும். கை விரல்களால் விரல்களைத் தொட்டு பின்னர் பழைய நிலைக்கு வரவும். ஒவ்வொரு முறையும் காலை மாற்றி மாற்றி இவ்வாறு 15 முறை செய்யவும்.

முழு உடலுக்கும் ஏற்ற அருமையான பயிற்சி:

உடற்பயிற்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். அதாவது, இதைச் செய்துவிட்டுத்தான் மற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். எல்லா உடற்பயிற்சிகளையும் செய்து முடித்த பின் இறுதியாக இந்த உடற்பயிற்சியை மீண்டும் ஒருமுறை செய்ய வேண்டும்.

கால்களை அகலமாக வைத்துக் கொண்டு, (1 அடி) நிற்க வேண்டும். கைகளைத் தலைக்கு மேல் கோர்த்துக் கொள்ள வேண்டும். உடலைக் கூடிய வரை உயர்த்தி, முழங்காலை மடக்கி மெதுவாக முன்னோக்கி வலது கால் மீது வளையவும். கைகளால் வலது காலை அழுத்தி உடலைக் கால்களுக்கு இடையில் கொண்டு வரவும்.

பின்னர் கைகளைத் தரையில் அழுத்தி நிமிரவும். மீண்டும் இதேபோல் இடது கால் மீது வளைந்து பின்னர் பழையபடி நிமிரவும். இவ்வாறு ஒவ்வொரு கால் மீதும் 5 முறை செய்யவும்.

வயதானவர்கள் இந்த உடற்பயிற்சிகளை மிகவும் எளிதாகச் செய்யலாம் எந்தச் சிரமமுமில்லை.

இந்த உடற் பயிற்சிகளைத் தினமும் ஒழுங்காக செய்து வந்தாலே போதுமானது. உடலை ஆரோக்கியமாகவும், அளவாகவும், அழகாகவும் வைத்திருக்கலாமே!

இந்த உடற்பயிற்சிகளைச் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

1. அதிகமான கொழுப்பைக் குறைக்கிறது.
2. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இயல்பான நிலைக்குக் கொண்டு வருகிறது.
3. இரத்தத்தில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்துச் சிராக்குகிறது.
4. தேவையற்ற சதைகளை உதைத்துத் தள்ளுகிறது.
5. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் நாம் விளங்க இப்பயிற்சிகள் உறுதுணையாக நிற்கிறது.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த இந்த எளிய உடற்பயிற்சிகளை நீங்களும் செய்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாமே! அதுமட்டுமா, வயதானவர்களாகிய உங்கள் உடம்பு அழகாகவும், அளவாகவும் அமைந்து. பார்ப்பவர்களைக் கவர்ந்து இழுக்கும்! இதில் எள்ளளவும் ஐயமில்லை.

தாராபுரம் சுருணிமகன்