காவிரி விவகாரத்துக்கு நான் கண்டிப்பாக குரல் கொடுப்பேன்: சமுத்திரகனி

காவிரி விவகாரத்துக்கு நான் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். இது தொடர்பாக நடிகர் சங்கம் ஆர்பாட்டம் நடத்தினால் நான் கலந்துகொள்வேன் என இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டபின் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சமுத்திரகனி கூறியதாவது:-

இன்று 7 கோடி பேரும் படங்களை ரிவ்யூ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். போன் வைத்திருப்பவர்கள் ரிவ்யூ செய்யலாம் என ஆகிவிட்டது. நல்ல படம் என்றால் அது ஓடிவிடும். ரிவ்யூ அதை பாதிக்காது. விமர்சனம் என்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. தரமான படங்கள் என்றால், அது கண்டிப்பாக ஓடும். நல்ல சினிமாக்களை மக்கள் வரவேற்பார்கள்.

நான் 5 படங்களை தயாரித்திருக்கிறேன். இதுவரை சென்சாருக்கு நான் காசு கொடுத்ததில்லை. என்னனுடைய ‘அப்பா’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன். நியாயமாக ‘அப்பா’ திரைப்படத்தை அரசு எடுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் நான் தயாரித்த படத்துக்கு வரிவிலக்கு பெற காசு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் சிறிய படங்கள் அதிகரித்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு வருடத்துக்கு 1000 படங்கள் என வெளியாகிறது. சிறிய படங்கள் வெளியாகாமல் சிக்கிவிடுகிறது.

காவிரி விவகாரத்துக்கு நான் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். தனியொரு மனிதனாக இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசினால் நடக்க வேண்டிய விஷயங்கள் நடக்கும். இது தொடர்பாக நடிகர் சங்கம் ஆர்பாட்டம் நடத்தினால் நான் ப்ரீயாக இருந்தால் கலந்துகொள்வேன். காவிரி விவகாரத்தை பொறுத்தவரை சம்பந்தப்பட்டவர்கள் பேசிய முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.